கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் தேசிய அணி வீரர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (LRH) விஜயம் செய்து மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு’ ஆதரவளித்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இதய-தொராசிக் வார்ட் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இலங்கை கிரிக்கெட் தேசிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் இந்த விஜயத்தில் பங்கேற்றது.
லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தின் தற்போதைய பணிகள் குறித்து வைத்தியசாலை அதிகாரிகளால் வீரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமீபத்தில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு’ 100 மில்லியன் ரூபாவை வழங்கியது.
இந்த நிதியானது LRH இல் ‘இதய மற்றும் சிக்கலான பராமரிப்பு வளாகத்தை’ உருவாக்க உதவும், இது கட்டப்பட்டவுடன், பிறவி இதய நோய்கள் (CHD) மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.