13 ஆம் திருத்தத்தை எதிர்க்க மொட்டுக்கு உரிமை இல்லை: நிமல் லன்சா சுட்டிக்காட்டு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குத் தார்மீக உரிமை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 13 இற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.
இரட்டை நிலைப்பாட்டு
13ஆவது திருத்தம் தற்போதும் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களைப் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது , பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராகக் கருத்து வெளியிட்டதன் மூலம் நாட்டின் முன் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாகக் காண்பித்துள்ளது.
ஸ்திரமான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அனைவரும் ஏற்கும் வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்களிக்க முடியும். அப்போது சகல மக்கள் மத்தியிலும் இலங்கையர் என்ற உணர்வு கட்டியெழுப்பப்படும்.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம்
சர்வதேச நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.
இது தொடர்பான புரிதல் சிறிதளவும் இன்றி, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டுக்கும், மனசாட்சிக்கமைய செயற்படும் பொதுஜன பெரமுனவின்
ஏனைய உறுப்பினர்களது நிலைப்பாட்டுக்கும் முரணான கருத்தைப் பொதுச் செயலாளர்
சாகர காரியவசம் எந்த அடிப்படையில் தெரிவிக்கின்றார் என்பதை அவர் தெளிவுபடுத்த
வேண்டும் என தெரிவித்தார்.