டிஜிட்டல் தளம் மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்
விவசாயிகளுக்கு உர மானியங்களை டிஜிட்டல் தளம் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அரசினால் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியம் சரியான நேரத்தில் கிடைப்பதையும், குறித்த நிதியுதவியை அவர்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத் தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
டிஜிட்டல் தளம்
எனவே, விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும் முறைசார்ந்த வகையிலும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்காக QR குறியீடு அல்லது பொருத்தமான முறையொன்றைப் பயன்படுத்த வேண்டியுள்ளமை அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, உரமானிய வேலைத்திட்டத்துக்கு தகைமை பெறுகின்ற அனைத்து விவசாயிகளையும் விவசாய அமைச்சின் கீழுள்ள பிரதேச அதிகாரிகள் மூலம் அடையாளங் காண்பதற்கும், அவ்வாறு தகைமை பெறுகின்ற விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்கு QR முறைமை அல்லது பொருத்தமான டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியும் விவசாய அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |