இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 68 இலங்கையை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரவித்துள்ளார்.
இந்த சிவப்பு பட்டியலின் படி, வெளிநாடுகளில் கைதுகள் இடம்பெற்று வருவதாகவும் நேற்று முன்தினம் 3 இலங்கையர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 3 நபர்களும் இலங்கைகக்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸார் விசேட நடவடிக்கை
அதேபோன்று, இதர காரணங்களால் மேலும் 6 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கைத்துப்பாக்கி, 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்கப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.