வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
திருகோணமலையில் அமைந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியுலர் அலுவலகத்தின் முன்னாள் நேற்று (01.06.2023) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பட்டு வெளிநாடுகளில் கஷ்டப்படும் இலங்கையர்களை உடனடியாக தாயகத்துக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மகஜர் கையளிப்பு
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.இதில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.அத்தோடு அரசாங்கமானது போலி வெளிநாட்டு முகவர்களை தடை செய்,பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்,நாட்டுக்கு வர தவிக்கும் பெண்களை வீட்டுக்கு அனுப்பு உள்ளிட்ட கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு அமைச்சின் திருகோணமலை பிராந்திய
கொன்சியுலர் அலவலகத்திற்கு சென் பெண்கள் சிலர் அலுவலக கிளைத் தலைவர்
கே.விக்னேஸ்வரானந்தன் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும்
கையளித்திருந்தனர்.




