கிரிக்கெட் மீதான தடை குறித்து பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட், மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்கிறார்கள் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலையீடு
இந்நிலையில், இதனை தேசிய பிரச்சினையாக கருதி இலங்கை கிரிக்கெட் சபையில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இது அரசியல் தலையீடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாக “கிரிக்இன்போ” இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கிரிக்கெட் தலைவர் இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்தால் அது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும் எனவும், அதற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.