மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!
மலேசியாவில் (Malaysia) சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 1,608 இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ், அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியுடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நடைமுறைக்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 28 ஆம் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 124 சட்டவிரோதமா மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்களை, நாடு கடத்த அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள்
மலேசியாவில் பல இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், தற்போது குறித்த இலங்கையர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, மலேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,732 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்த நடவடிக்கை
மலேசியா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்கி, நிதி நிவாரணத்துடன் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்பில் மலேசிய அரசாங்கம் அதிக கவனத்துடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வயோதிபர்கள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவ தேவையுடையோர் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாடு கடத்தப்படும் போது, அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.