பாகிஸ்தானின் விமான நிலையத்தில் இலங்கையரொருவர் கைது
கட்டாருக்கு 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்ற இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தானின் விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சியானது, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹா செல்லும் விமானத்தில் பயணிகள் ஏறும் முன்னர் மேற்கொள்ளப்படும் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது முறியடிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
பாதுகாப்பு பணியாளர்கள் சந்தேகித்து பையொன்றை சோதனையிட்டதில், அதில் 10.294 கிலோ கிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரின் அடையாளம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.