சமூகத்திற்கான கட்சியை பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டும்! ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவிப்பு
சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது கட்சியை பலப்படுத்த மக்கள் முன் வர வேண்டும். ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் ரிசாத் பதியுதீனின் கட்சிகளினால் முஸ்லிம்களோ இந்த நாடோ நன்மைகளை பெறவில்லை. அனைவராலும் கண்டது ஏமாற்றம் தான் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் ஊடக பேச்சாளர் முபாரக் முப்தி தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஊடாக செய்தி ஒன்றினை அனுப்பி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாராலும் முறியடிக்க முடியவில்லை
மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, முஸ்லிம் எம்.பிமார் அதிகரிப்பின் மூலம் இந்த சமுதாயம் ஏதும் விசேட நன்மைகள்? உரிமைகள் பெற்றதா?இந்தக்கேள்விக்கு விடை இல்லவே இல்லை என்பதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்ரீமாவோ தலைமையிலான ஆட்சியில் ஓரிரு முஸ்லிம்களும் ஓரிரு முஸ்லிம் அமைச்சர்களுமே இருந்தனர்.அவர்களில் ஒருவரான பதியுதீன் மஹ்மூத் செய்த சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
அந்த ஆட்சியில் அமைச்சராக இல்லாது ஒரு எம்.பியாக எம்.சி அஹமத் கல்முனை தொகுதிக்கு செய்த சாதனையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபாலும் கல்முனைக்கு செய்ய முடியவில்லை.அதுபோல் ஐ.தே.க ஆட்சியிலும் ஓரிரு முஸ்லிம் எம்பீக்களே இருந்தனர்.
எம்.எச்.முஹம்மத், ஏ.ஆர்.எம் மன்சூர், சம்மாந்துறை மஜீத் போன்ற சிலர். இவர்களின் சேவையில் ஒரு துளியை கூட இன்றைய ரவூப் ஹக்கீமால் சமூகத்துக்கு செய்ய முடியவில்லை.
1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு 7 எம்.பிக்களே இருந்தனர். இருந்தும் தலைவர் அஷ்ரப் மட்டும் பல சேவைகள் செய்தார். ஆனாலும் முஸ்லிம்களின் இழந்த ஒரு உரிமையையையும் அவரால் பெற்றுத்தர முடியவில்லை.
அபிவிருத்தி
அந்நாட்களில் முஸ்லிம்களின் உரிமைகளாக பல கோஷங்கள் மு. காவால் முன் வைக்கப்பட்டன. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மௌலவி ஆசிரியர் நியமனம் தென்கிழக்கு மாகாண சபை கல்முனை கரையோர மாவட்டம் என பல. இவற்றில் ஒன்றையும் பெற முடியவில்லை. சில அபிவிருத்திகளை மட்டுமே பெற முடிந்தது.
அபிவிருத்தி தேவையாயின் ஒரு சாதாரண அரச கட்சி எம்பியால் பெற்றுத்தர முடியும்.அதன் பின் 2001ம் ஆண்டு ஹக்கீம் தலைமையில் 11 எம்.பிக்கள் இருந்தனர்.இன்று வரை எந்த உரிமையும் இல்லை சொல்லக்கூடிய அபிவிருத்திகளும் இல்லை.
அக்கட்சியின் தளமான கிழக்கு ஏமாந்து போய் அழுது கொண்டிருக்கிறது. புலிகள் அரசு பேச்சுவார்த்தையில் தனித்தரப்பை வீணாக்கி முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் ஒரு தரப்பாக கூட இல்லை என காட்டிக்கொடுத்தார் ஹக்கீம். இது போன்றுதான் அதாவுள்ளாவின் கட்சியாலும் ரிசாத் பதியுதீனின் கட்சியாலும் முஸ்லிம்களோ இந்த நாடோ சொல்லும் படியான நன்மைகளை பெறவில்லை. அனைவராலும் கண்டது ஏமாற்றமே.
ஆகவே எம்.பிக்கள் அதிகம் இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. சமூகத்துக்காக எதையும் தூக்கி வீசக்கூடியஇ பணத்துக்கும் பதவிக்கும் மயங்காத திறமையான ஓரிரு முஸ்லிம் எம்பீக்கள் போதும் சாதிக்கலாம். எண்ணிக்கை தேவையில்லை குவாலிட்டியே தேவை. ஆகவே சமூகம் இதுவரை ஏமாந்தது போதும் இனியாவது சமூகத்துக்கென அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது கட்சியை பலப்படுத்த மக்கள் முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.