46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டம்!
கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டமானது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நேற்றுடன் (19) 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்ட பங்கரவாத தடைச்சட்டம் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளது.
குறித்த சட்டமானது, ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட நோக்கம் வேறாக இருந்தாலும் பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக, தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காவே இச்சட்டம் பயன்பாடுத்தப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.
இந்தச் சட்டத்தின் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த தரப்பாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கத்தினர் உள்ளனர். அவர்கள் தற்போது அந்தச் சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பதற்கு முனைவதானது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.
தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் ஜே.வி.பி பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றுச் சட்டத்தினைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஜே.வி.பியின் இந்த மாற்றமானது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.
ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் வரையில் உரிய அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும்“ என தெரிவித்தார்.