வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களால் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை நிகழ்நிலையில் பெறுவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான முன்மொழிவு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு (IOM) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
அதற்கமைய, 20 தூதுப்பணிக் குழுக்கள்/அலுவலகங்கள் உள்ளடங்கும் வகையில் உயிர்க்குறிகள் சேரிப்பு நிலையம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்வதற்கான வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவதற்கு உரிய முறைமைகள்/மென்பொருட்களின் அபிவிருத்தி மற்றும் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி துரிதமாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள அடையாளம் காணப்பட்ட 20 இலங்கை தூதரகங்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலையில் கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த சமர்ப்பித்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |