இலங்கை நிர்வாகத்திற்கு 15 அமைச்சுக்கள் இருந்தாலே போதுமானவை: வெரிடே ரிசர்ச் அமைப்பு
இலங்கைக்கு 15 அமைச்சுக்கள் இருந்தாலே நிர்வாகத்தை முன்னெடுக்கப் போதுமானவையாக இருக்கும் என்று வெரிடே ரிசர்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே வெரிடே ரிசர்ச் இது தொடர்பான ஆவணம் ஒன்றைக் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது.
ஒரே அமைச்சின் செயற்பாடுகள்
நிதி மற்றும் திட்டமிடல், நீதி, பாதுகாப்பு, கல்வி மற்றும் பரீட்சை, சுகாதாரம், கமத்தொழில், தொழில், பொதுமக்கள் சேவை, துறைமுகம், கப்பல்போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள், பொருளாதார விவகாரங்கள், உள்ளூராட்சி மற்றும் பொது நிர்வாகம், வௌிநாட்டலுவல்கள், குடும்ப மற்றும் சமூக அபிவிருத்தி, சமூக மற்றும் கலாசாரம், சுற்றுச்சூழல் ஆகிய 15 அமைச்சுக்களே வெரிட்டாஸ் ரிசர்ச் இன் மூலமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள அமைச்சுகளாகும்.
ஒரே அமைச்சின் செயற்பாடுகளை இரண்டு அமைச்சுகளுக்குப் பகிர்ந்தளித்தல், தொடர்பில்லாத விடயங்களை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வருதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக நிர்வாகத் திறன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், சிக்கல்களும் ஏற்படுவதாக வெரிட்டாஸ் ரிசர்ச் சுட்டிக் காட்டியுள்ளது.