இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட IRIS Dena.. முக்கிய அழைப்பை மேற்கொண்ட ஈரான்
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
IRIS Dena தாக்குதல்..
இந்த உரையாடலின் போது, ஈரானிய கடற்படைக் கப்பலான 'IRIS Dena' மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாலுமிகளை மீட்பதற்கும், உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீண்டும் ஈரானுக்கு கொண்டு செல்வதற்கும் இலங்கை அரசு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக ஈரான் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதேவேளை, 'IRIS Dena' கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை "முன்னோடியில்லாத போர்க்குற்றம்" என்று வர்ணித்த அமைச்சர் அரக்சி, இது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் 1949 ஜெனிவா உடன்படிக்கைகளை மீறும் செயல் என்று கடுமையாகச் சாடினார்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் ஈரான் முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடினர்.