இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு
இஸ்ரேலின் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் தமது பணியகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான பதிவை மேற்கொள்வதற்கு 14,700 ரூபாவை செலுத்துமாறு சிலருக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மீண்டும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை
இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக ஏற்கனவே பணம் செலுத்திய எந்தவொரு நபரும் மீண்டும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும், அவர்கள் கூறும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறும், பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பணியகம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1989 எனும் துரித இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |