டொலரின் பெறுமதி 700 ரூபா : கணிப்பை பொய்யாக்கிய அரசாங்கம்
நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது ஒரு டொலர் 380 ரூபாவாக இருந்தது. டொலர் 500, 600 அல்லது 700 ரூபாயை எட்டக்கூடும் என்று கணிப்புகள் இருந்தன. எனினும் இன்று நாம் டொலரின் பெறுமதியை 290 ரூபாவிற்கு வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜூலை 2022 நிலவரப்படி நாட்டின் இருப்பு 1,815 மில்லியன் டொலர்கள் ஆகும். இந்த ஆண்டு பெப்ரவரிக்குள் கையிருப்பு பணத்தை 4,491 மில்லியன் டொலர்களாக உயர்த்தியுள்ளோம். கடனை மீளச்செலுத்தாத எமது உத்தியே இந்த உயர்வுக்குக் காரணம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
வாகன இறக்குமதி
எவ்வாறாயினும், சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் (ஐஎஸ்பி) தவிர மற்ற வெளிநாட்டுக் கடனை நாங்கள் திருப்பிச் செலுத்தத் தொடங்கியுள்ளோம். தனியார் வாகனங்களைத் தவிர்த்து இறக்குமதியையும் திறந்துள்ளோம். மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் வருட காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக 12.4 ஆக இருந்தது. இருப்பினும், அதை நேர்மறையான மதிப்பாக மாற்ற முடிந்தது. கடந்த 2023 வருடத்தின் காலாண்டில் அதை நேர்மறை 4.2 ஆக உயர்த்த முடிந்தது.
2022 ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள 52 அரசுக்குச் சொந்தமான பெரிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்தன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது. இந்த நிறுவனங்கள் கூட்டாக ரூ.744,658 மில்லியன் இழப்பை சந்தித்தன.
இருப்பினும், ஏப்ரல் 2023க்குள், அந்த நிறுவனங்கள் லாபகரமாக மாறியது. இன்று இந்த நிறுவனங்கள் ரூ.144,224 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |