பாரிய நிதி மோசடிக்கான திட்டம்! பொதுமக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples FCID - Financial Crimes Investigation Division
By Dhilak Aug 18, 2026 05:39 AM GMT

இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகைகளைக் கொள்ளையடிக்கும் நுட்பமான மோசடித் திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் பற்றிய தகவல்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக மோசடிக்காரர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடியாளர்களின் திட்டம்

அதன்போது, வைப்புத்தொகைகள் மோசடியான வழிகளில் பெறப்பட்டதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து FCID விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறி குறித்த சந்தேகபர்கள் மக்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.

பாரிய நிதி மோசடிக்கான திட்டம்! பொதுமக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை | Sri Lanka Cert Warned Public About Fraud Scheme

அத்தோடு, தங்களது கூற்றை உண்மை என நம்பவைப்பதற்காகப் போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், போலி அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்பி வைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு, FCID அதிகாரியுடையது எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் வைப்புத்தொகையில் பாதியை மாற்றிவிட்டு அதன் ரசீதை ஆதாரமாக அனுப்புமாறும் கோருவதாகவும் தெரியவருகிறது.

எச்சரிக்கை

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் முடிந்ததும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிக்கான திட்டம்! பொதுமக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை | Sri Lanka Cert Warned Public About Fraud Scheme

இந்த மோசடிக்காரர்கள் காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்துக் கொண்டு மிகவும் நுட்பமாக இயங்கி வருவதாக Sri Lanka CERT தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய கோரிக்கைகளுக்குப் படிந்து நிதித் தகவல்களை வழங்கவோ அல்லது பணத்தை மாற்றி அனுப்பவோ வேண்டாம் என்றும், குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து குடும்பத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.