அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை!

Government Employee Government Of Sri Lanka Weather
By Fathima Dec 16, 2025 07:14 AM GMT
Fathima

Fathima

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விசேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை, திங்கட்கிழமை (15) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசேட விடுமுறை 

இது தொடர்பான சுற்றறிக்கையில், டிட்வா புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை! | Special Leave For Government Employees Sri Lanka

அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமுகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமுகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறை வழங்குதல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாத்திரம் பொருத்தமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.