இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்

Ranil Wickremesinghe Sri Lanka Driving Licence
By Fathima Jun 28, 2023 11:00 AM GMT
Fathima

Fathima

விசேட தேவையுடையவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பிலான அனுமதியை வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் காணப்படும் விசேட தேவையுடைய சுமார் 6 இலட்சம் பேரின் உடல் தகுதி குறித்து கடந்த காலங்களில் மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்காததால், இவர்களின் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டது.

இந்நிலையில், வைத்தியர்களின் உடன்படிக்கையுடன் கூடிய, சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உடற்தகுதிச் சான்றிதழ்

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவரும், கம்பஹா மாகாண சபை உறுப்பின அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டத்தின்படி, எந்தவொரு அரசாங்கப் பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடமும் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை போக்குவரத்து ஆணையாளர் ஜனாதிபதிக்கு வழங்குவார் என்றும் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தற்போதுள்ள சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.