மட்டக்களப்பில் வெள்ள நிலவரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது இன்னும் நாம் தயார்படுத்தலுடன் இருந்திருக்கலாம். அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலமை உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பாக இன்று (2) புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைசாராத அபிவிருத்தித் திட்ட பணிகள் முன்னெடுத்தமையினால் அதிக வெள்ளப்பெருக்கு அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டி இருந்த ஒரு முக்கிய காரணியாக அமைந்து காணப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டங்கள்
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மண் அகழ்வு, சம்பந்தமாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வுகளை கண்டுள்ளோம். விதிமுறைகளுக்கு முரணான சட்ட விரோதமான மண் அகழ்வுகள் இடம்பெற்றால் நீங்கள் அதற்கு முறைப்பாடு செய்யலாம்.
எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி திட்டங்கள் மக்களை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக இடம்பெயருவது சம்பந்தமாகவும், அவர்களுக்குரிய நிவாரண பொருட்கள் வழங்குவது சம்பந்தமாகவும், சுத்தமான குடிநீர் வழங்குவது, சுகாதார சேவைகளை முன்னெடுப்பது, பாதிக்கப்பட்ட விவசாய செய்கைகளுக்குரிய நிவாரணம் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தீர்க்கமான முடிவுகள்
அத்தோடு ,கடற்றொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது சம்பந்தமாகவும், இடர் அனர்த்தங்களின் போது பொதுமக்களை காப்பதற்கு மேலதிக கடற்படையினரை ஈடுபடுத்துவது சம்பந்தமாகவும், இந்த விசேட கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரிடம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டம் தொடர்பான கைநூலும் அரசாங்க அதிபரினால் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் மாவட்டத்திலுள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தின் சகல அரச திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |