தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி வெற்றியாளர் கௌரவிப்பு
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நான்காவது தென்கிழக்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்ற ஆர்.எம்.நிப்ராஸ், ஊர் மக்களால் கௌரவிக்கப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆர்.எம்.நிப்ராஸ் குறித்த போட்டியில் பதக்கத்தை வென்று தம்பலகாம பிரதேச மண்னுக்கு பெருமை சேர்த்தமைக்காக ஊர் மக்களால் இந்த கௌரவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான நிகழ்வு நேற்று(03.11.2025) தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வீரர் ஆர்.எம்.நிப்ராஸின் மிக நீண்ட நாள் கனவு
இந்நிகழ்வின் போது விளையாட்டு வீரர் ஆர்.எம்.நிப்ராஸ்க்கு சக உத்தியோகத்தர்கள் இணைந்து அமோக வரவேற்பளித்ததுடன் பொன்னாடை போர்த்தி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் குறித்த வீரரின் குடும்பத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த விளையாட்டு வீரர் ஆர்.எம்.நிப்ராஸ், "சர்வதேச மட்டத்தில் சாதனைகளை படைக்க வேண்டும் என்பது எனது மிக நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனை எனது அயராத முயற்சியால் தற்போது அடைந்துள்ளேன்.
அத்துடன் எனக்கான இந்த கெளரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதேச செயலாளருக்கும், என்னை இந்த வெற்றியை அடைவதற்கு முழு திறனுடன் திறம்பட பயிற்றுவிப்பை வழங்கிய விளையாட்டு உத்தியோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான கே.எம்.ஹாரிஸ் அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






