பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதினை தடுக்க நடவடிக்கை
இலங்கையைச் சேர்ந்த பெண்கள், வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றுவதனை தடுக்கும் யோசனைத் திட்டமொன்றை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் தாம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களிடமும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நிறுத்தி, பயிற்றப்பட்ட பணியாளர்களாக உயர் சம்பளங்களுடனான வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பத்தாண்டு காலப் பகுதிகளில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண் தொழில்களுக்காக செல்வதனை முழுமையாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.