காசோலை மோசடிக்கு கடுமையான தண்டனை: விரைவில் புதிய சட்டத் திருத்தம்
வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலை வழங்குவோருக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என முன்மொழியப்பட்ட திருத்தம், விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
காசோலை ஆறு மாதங்களுக்குள் வழங்கப்பட்டு, பணம் பெறுபவர் அல்லது காசோலையை வைத்திருப்பவர், காசோலை திரும்பப் பெறப்பட்ட தகவல் கிடைத்த 90 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பணம் செலுத்தக் கோரினால் அதன்படி அந்த பணத்தை செலுத்துபவர் 90 நாட்களுக்குள் பணம் செலுத்தத் தவறினால், அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என கூறப்படவுள்ளது.
இந்த சட்டம், போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவோர் மற்றும் மூடப்பட்ட கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குவோருக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் பரிவர்த்தனை அவசரச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த திருத்தங்களின்படி, விதிக்கப்படும் அபராதம் காசோலையின் தொகைக்கு சமமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி நடவடிக்கை எடுக்க, திருப்பி அனுப்பப்பட்ட காசோலை சான்றாகக் கருதப்படும்.
இந்நிலையில் வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் என நீதி அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.