பிரிந்து நின்று செயல்பட்டால் ஆசனங்களை இழப்போம் - முன்னாள் எம்.பி கவலை

By Shalini Balachandran Oct 02, 2024 02:54 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்டோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர், இந்திய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

தமிழர் மக்களுடைய பிரச்சினை

அவையாவன தற்போதுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டில் தாங்களும் இணைந்து செயல்பட போவதாக இந்திய தூதுவர் எடுத்துக் கூறினார். அடுத்து வடக்கில் அதிகளமான அபிவிருத்தியை இந்தியா செய்ய இருக்கின்றது.

பிரிந்து நின்று செயல்பட்டால் ஆசனங்களை இழப்போம் - முன்னாள் எம்.பி கவலை | Selvam Adaikalanathan Mp Press Meet

அவ்வாறான அபிவிருத்தியின் போது அதன் பலன்களை தமிழ் மக்கள் அடைய வேண்டும் என்ற ரீதியில் அவருடைய கருத்துக்கள் இருந்தன. அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். தற்போது உள்ள அந்த பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக் கூறினார். இந்நிலையில் தமிழரசு கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது.

இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன். இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது.

பொதுச் சின்னத்தில் போட்டி

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசு கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம், ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும் கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும்.

பிரிந்து நின்று செயல்பட்டால் ஆசனங்களை இழப்போம் - முன்னாள் எம்.பி கவலை | Selvam Adaikalanathan Mp Press Meet

அந்த வகையில் எங்களைப் பொருத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம். விமர்சனங்கள் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் வெளிப்படையாக சஜித்துக்கும் ரணிலுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பொது வேட்பாளராக களம் இறங்கிய அரியனேந்திரன் 2 லட்சம் வாக்குகளை பெற்றது என்பது சாதாரண விடயம் அல்ல.

நாங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்திருந்தால் கூடுதலாக வாக்குகளை பெற்று இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது. இந்த காலத்திலே விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றது. தேசியத்தோடு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கு விரலை நீட்டி அவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நிலைமை காணப்பட்டது. அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கின்றது. அவை ஆராயப்பட வேண்டும்.

எமக்கு பெரிய ஆபத்து

குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும்.

பிரிந்து நின்று செயல்பட்டால் ஆசனங்களை இழப்போம் - முன்னாள் எம்.பி கவலை | Selvam Adaikalanathan Mp Press Meet

மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே வன்னியை பொருத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது.

அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும். ஆகவே மக்கள் கோபப்படும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்காது, இருக்கவும் கூடாது என கேட்டு கொள்வதோடு ஒரே அணியில் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தான் சாதகமாக இருக்கும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.