இன்று முதல் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு
கல்வி பொதுத் தராதர உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று (12) முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
ஏனைய 24 மாவட்டங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
பதுளை, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளைய தினமும், கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை மறுதினமும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் 17ஆம் திகதியும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 19ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் 22ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |