அரசியலில் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி
மக்கள் கோரிக்கை விடுத்தால் அரசியல் பிரவேசம் குறித்து கவனம் செலுத்தத் தயார் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்தார்.
இதனால் புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகியுள்ள அரசியல் தலைமையை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மக்களும் கட்சியும் கோரினால் ஏற்பது குறித்து கவனம் செலுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடகங்களில் வெளியிடப்படுவது போன்று தாம் அரசியலில் பிரவேசிக்கத் தயார் என அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் எந்த ஊடகத்திடமும் கருத்து வெளியிட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது எனவும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு செயற்பட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், மக்களும் கட்சியும் கோரினால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சனத் நிஷாந்தவின் மனைவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டுமென பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.