மனித பாவனைக்குத் தகுதியற்ற டின் மீன் விற்பனை! இரகசிய மின்னஞ்சலை அம்பலப்படுத்திய துஷான் குணவர்தன
2021ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மனித பாவனைக்குத் தகுதியற்ற டின் மீன் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும், தற்போது தகவல் வெளியிடுபவராக செயற்பட்டு வரும் துஷான் குணவர்தன இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
துறைமுக அதிகாரசபையால் தடை செய்யப்பட்ட டின் மீன்களை விற்குமாறு 2021 ஜூலையில் அரசுக்கு சொந்தமான சதொச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை குணவர்தன வெளியிட்டார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையினால் தடைசெய்யப்பட்ட டின் மீன்களை லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக விற்பனை செய்ய அமைச்சரவை தீர்மானித்ததாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிவாயு கொள்கலன் பிரச்சினை
அந்த நேரத்தில் குறித்த விற்பனையை நிறுத்த நுகர்வோர் அதிகார சபை தலையிட்டது ஆனால் வர்த்தக அமைச்சகம் அதை தொடர விரும்பியது என்று துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் பூண்டு மோசடி மற்றும் எரிவாயு கொள்கலன் பிரச்சினை தொடர்பாக தகவல்களை வெளியிட்டிருந்தார்.
எரிவாயு கொள்கலன்கள், கசிவதால் வெடித்த சம்பவங்கள் பதிவாகும் முன்னரே சந்தையில் உள்ள சில உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து குணவர்தன அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |