முதலமைச்சர் வேட்பாளராகக் எஸ்.எம்.மரிக்கார்
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
இரு கட்சிகளும் இணையாமல் என்னிடம் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(31.10.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரே மேடையில் இணைந்து ஒரே சின்னத்தில் களமிறங்கினால், கட்சி என்னிடம் கோரினால் எனக்கு வாக்களித்த வாக்காளர்கள் ஆணை வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராக உள்ளேன்.

அத்துடன், கட்சி என்னிடம் கோரிக்கை விடுக்காமல் பலவந்தமாகச் சென்று தேர்தலில் போட்டியிட நான் தயாராக இல்லை. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல், கட்சி என்னிடம் கோரிக்கை முன்வைத்தால் அதை ஏற்க மாட்டேன்.
இரு கட்சிகளும் பிளவடைந்தததால் பயன்படுத்தப்படாமலுள்ள வாக்குகள் பல இலட்சம் உள்ளன. எனவே நாம் மீண்டும் இணைந்தால் அந்த வாக்குகளை மீளப் பெற முடியும்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |