இலங்கைப் படையினர் இரண்டாக பிளவடைந்து மோதிக் கொள்கின்றனர் : தயாசிறி ஜயசேகர
இலங்கைப் படையினர் இரண்டாக பிளவடைந்து மோதிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்ட இலங்கைப் படையினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் சார்பில் போரில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் ரஷ்யாவின் முகாம் உதவியாளர்களாக பணிக்கு செல்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு முகாம் உதவியாளர்கள் என்ற பெயரில் பணிக்குச் செல்வோர் போரில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் குசந்த குணதிலக்க என்ற படைவீரர் இவ்வாறு உதவியாளராக சென்று, பீரங்கிப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், பீரங்கி வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தின் போது குசாந்த தப்பித்தார் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் அவர் பற்றிய எந்தவொரு தகவலும் கிடையாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
18 இலட்சம் செலுத்தி செல்கின்றனர்
இந்திய நிறுவனமொன்றின் ஊடாக 18 இலட்சம் ரூபா பணம் செலுத்தி இவ்வாறு ரஷ்யா, உக்ரைன் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் இன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
ஒய்வு பெற்றுக்கொண்ட படையினருக்கு போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு அவர்கள் செல்வதாகவும் அரசாங்கம் இதற்கான தீர்வினை வழங்க வேண்டுமெனவும் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.