மோட்டார் போக்குவரத்து திணைக்கள கணனி தரவுத்தளத்தை ஊடறுத்து மோசடி
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணனி தரவு தளத்தை ஊடறுத்து மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளதாக நீதிமன்றில் அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி போலியான தகவல்களை உள்ளீடு செய்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி காரணமாக அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு அணைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது.
சட்டவிரோதமான முறையில் கணனி கட்டமைப்பினை ஊடறுத்து தகவல்களை உள்ளீடு செய்து வாகனங்களை பதிவு செய்வதனால் இலங்கை சுங்கத்திணை களத்திற்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை பணம் செலுத்தப்படவில்லை எனவும் இதனால் அரசாங்கத்திற்கு பாரிய சட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விசிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் இரண்டு ஜீப் ரக வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு 140 மில்லியன் ரூபா நட்டம்
இந்த இரண்டு வாகனங்களையும் மோசடியான முறையில் பதிவு செய்ததன் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 140 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஜீப் வண்டிகளையும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.
இந்த ஜீப் வண்டிகளை சுங்கத் திணைக்கத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் பிரசன்ன அல்விஸ், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.