முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பை சுட்டிக்காட்டியுள்ள ரிஷாட்
அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (07) திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேர்தலின் முடிவு
மேலும் தெரிவிக்கையில், வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் என்பவை இந்தத் தேர்தலின் முடிவிலேயே தங்கியுள்ளது.
எனவே, மிகக் கவனமாகச் சிந்தித்து தீர்மானமெடுக்க வேண்டிய தருணத்துக்கு நாம் வந்துள்ளோம். ஆசை வார்த்தைகள் மற்றும் அவசரப்புத்திகளுக்கு அடிமைப்படாமல் எம்மைச் சுதாகரித்துக் கொள்வதும் அவசியம்.
இளைஞர்களுக்கு இவ்விடயத்தில் அதிக நிதானம் அவசியம். ஒருசில இளைஞர்களின் தடுமாற்ற புத்தியாலும் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாலுமே, ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. சகல முஸ்லிம்களையும் சந்தேகக்கண் கொண்டும் அடிப்படைவாத சந்தேகத்துடனும் பிறர் எம்மைப் பார்க்கும் அபாயச் சூழல், இத்தாக்குதலின் பின்னரேயே ஏற்பட்டது.
பள்ளிவாசல்களுக்கு உள்ளும் எமது வீடுகளுக்குள்ளும் மோப்பநாய்களைக் கொண்டுவந்து தேடுதல் நடத்தப்பட்டது. அரபு மத்ரஸாக்கள் ஆயுதப் பயிற்சிக் கூடங்களாக சந்தேகிக்கப்பட்டன. புனித குர்ஆன்களை ஒளித்து வைக்கும் நிலையும் எமக்கு ஏற்பட்டது. அநியாயமாக நாம் கைதிகளாக்கப்பட்டோம் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |