கல்முனையில் மீட்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி: தீவிர விசாரணையில் பொலிஸார்
அம்பாறை மாவட்டம் கல்முனை (Kalmunai) தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கியானது நேற்று (23) மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
ரிவோல்வர் ரக துப்பாக்கி
ரிவோல்வர் ரக கை துப்பாக்கியானது கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் துப்பாக்கியானது வெளியாகியுள்ள நிலையில் அங்கு விளையாட்டில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், மீட்கப்பட்ட துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் (ரிவோல்வர்) இயங்குநிலையில் காணப்படுவதுடன் ஜேர்மனி நாட்டு தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |