முன்மாதிரியான மாணவியர் சமுதாயத்தை நோக்கி மஹ்மூதியன்களின் பயணம் ஆரம்பம்

schools
By Independent Writer Oct 20, 2026 10:40 AM GMT
Courtesy: NOORUL HUTHA UMAR

 கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் 06 மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘முன்மாதிரியான மாணவியர் சமுதாயம்’ (Towards the Model Students) எனும் தொனிப்பொருளிலான விழுமிய அபிவிருத்தி முகாம், கல்லூரி முதல்வர் ஏ.எம். நெளஷாத் தலைமையில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மஹ்மூதியன் மாணவிகள் நாட்டுக்கே முன்மாதிரியான மாணவியர் சமுதாயமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாம், ஏற்பாட்டுக் குழுவான Team Identity இன் அயராத முயற்சியிலும் தரம் 06 மாணவிகளின் பெற்றோர்களது பூரண ஒத்துழைப்புடனும் காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடம்பெற்றது.
Towards the Model Students
 மாணவிகளின் ஆளுமை விருத்தி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் சிறந்த வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் வகையில் ஐந்து முக்கிய தலைப்புகளில் பயிற்றப்பட்ட வளவாளர்களைக் கொண்டு இம்முகாம் முன்னெடுக்கப்பட்டது. அன்றாடச் செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ளுதல், பொது விழுமியங்கள், சூழல் நேய நடைமுறைகள், கல்லூரி நடைமுறைகள் மற்றும் நல்ல நண்பர்களைத் தெரிவுசெய்தல் ஆகிய தலைப்புகளில் மாணவிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
Towards the Model Students
அன்றாடச் செயற்பாடுகள் தொடர்பான அமர்வில், காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரையிலான நேரத்தை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அன்றாடப் பணிகளை ஒழுங்குபடுத்துதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பொது விழுமியங்கள் தொடர்பான அமர்வில் வுழூ செய்தல், தொழுகையை முறையாக நிறைவேற்றுதல் உள்ளிட்ட ஆன்மிக மற்றும் ஒழுக்க விழுமியங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
Towards the Model Students
சூழல் நேய நடைமுறைகள் தொடர்பான அமர்வில் மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லூரி நடைமுறைகள் தொடர்பான அமர்வில் கல்லூரியின் ஒழுக்க விழுமியங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், நல்ல நண்பர்களைத் தெரிவுசெய்தல், மற்றவர்களுக்கு சிறந்த நண்பர்களாக விளங்குவதற்குத் தேவையான பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் தொடர்பிலும் மாணவிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
Towards the Model Students
இம்முகாமின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் இணைந்து பகல் உணவை மகிழ்ச்சியாக உண்ணுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. முகாமின் நிறைவு நிகழ்வில் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், மாணவிகளின் பங்குபற்றலையும் ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவிகளுக்குக் குறிப்பு புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவிகளிடையே சிறந்த ஒழுக்கம், பொறுப்புணர்வு, ஆன்மிக விழுமியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான நட்புறவுகளை வளர்ப்பதற்கு இவ்விழுமிய அபிவிருத்தி முகாம் பயனுள்ள களமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.