கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியாது: சில்லறை வியாபாரிகள் சங்கம்
இலங்கையிலுள்ள தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியாது என அகில இலங்கை அத்தியாவசிய, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்க தலைவர் டபிள்யூ. எம். நாஜிம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில், மடவளை மதினா தேசிய பாடசாலை அஷ்ரப் மண்டபத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற வியாபாரிகளினது சங்க கிளைகளின் அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
திட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் நலன்கருதியே அரிசியின் விலையை கட்டுப்பாட்டு விலைக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்தோம் இருந்தபோதிலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக அறிவிப்புக்களை இன்னும் சில தினங்களில் சங்க ஊடக சந்திப்பின் மூலம் வெளிக்கொணர்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையில் தற்போது பல அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலைகளுடன் காணப்படுகின்றன. இந்நிலையில், உதாரணமாக நாட்டரிசியின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அந்த விலையில் விற்க வியாபாரிகளுக்கே அரிசி கிடைப்பதில்லை.
ஒரு சில வியாபாரிகள் 230 ரூபாவிற்கு பெற்ற அரிசியை 235 ரூபா அல்லது 240 ரூபாய்க்கு விற்பனை செய்தால், நுகர்வோர் அதிகாரசபையினால் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்படுகின்றனர்.
தீர்மானங்கள்
அரிசியின் விலை தொடர்பில் வியாபாரிகளையும், பொது மக்களையும் பாதிக்காத வகையில் விலையில் முறையான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள ஊடக சந்திப்பொன்றில் கலந்துரையாடவுள்ளதாக சங்கம் முடிவெடுத்துள்ளது.
அத்துடன் ஏனையோருக்கு கிடைக்கும் விடுமுறை, ஓய்வூதியம் போன்ற சலுகைகள் வியாபாரிகளுக்கு கிடைப்பதில்லை. நாட்டின் பொருளாதார விருத்திக்கு வியாபாரிகளின் வரிப்பங்கு அளப்பரியதாகவே காணப்படுகின்றது.
வர்த்தகர்களாகிய நாங்கள் இயந்திரமாகவே எங்களுடைய வாழ்க்கையை முன்னெடுக்கின்றோம்.
எவ்வாறாக இருந்த போதிலும் வியாபாரிகள் என்ற வகையில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எங்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும் என்பதனை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
ஆகவே, வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு தீர்வுகள் தேவைப்படுகின்றன. மேலும் அவர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்யும் சூழலை ஏற்படுத்த சங்கமானது நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |