இரண்டாவது நாளாகவும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ள நிலையில், இரண்டாவது நாளாகவும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எந்த நேரத்திலும் திறக்கப்படக்கூடும்
தொடர்ச்சியான மழை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு அதிகளவு நீர் வரத்து பதிவாகி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதிகளில், குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றை பயன்படுத்தும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், காசல்ரீ, மவுசாக்கலை, கெனியோன், லக்ஸபான மற்றும் நவலக்ஸபான ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வான் பாயும் அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் எந்த நேரத்திலும் திறக்கப்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகளில் வாழும் மக்கள் தேவையற்ற முறையில் ஆற்றங்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், சிறுவர்களை ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் அனுமதிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையுடனான சீரற்ற காலநிலை
அத்துடன், தாழ்நிலப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் தொடரும் மழையால் பல ஆறுகளின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும், பொதுமக்கள் காலநிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மழையுடனான சீரற்ற காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், நீர்த்தேக்கங்களின் நிலைமை தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப மேலதிக வான்கதவுகள் திறக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




