முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை
ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக பண்டாரவினால் (Aloka Bandara) இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை ரமழான் பண்டிகைக்கான நோன்பு நோற்கப்படுகின்றது.
பண்டிகைக்கான முன்பணம்
அனைத்து அமைச்சக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களும் பெப்ரவரி 19 முதல் மார்ச் 21 வரை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பிரார்த்தனை மற்றும் மத நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதிகாரிகள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடக்கூடிய வகையில் பணி மாற்றங்களை ஏற்பாடு செய்யுமாறும், மேலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிறப்பு விடுப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை கூறுகிறது.
அந்தவகையில் மத நடவடிக்கைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாளாந்த நேரங்களை அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, காலை 3.30 மணி முதல் காலை 6.00 மணி வரை, மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை, மாலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை என அந்த நேரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்னர் தகுதியான ஊழியர்களுக்குப் பண்டிகைக்கான முன்பணம் வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.