யாழ். வலிகாமத்தில் 234 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் விடுவிப்பு

Sri Lankan Tamils Jaffna Ranil Wickremesinghe
By Madheeha_Naz Mar 23, 2024 12:34 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்கள் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234.83 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பலாலி ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது குறித்த காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன.

அதற்கான ஆவணத்தை யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார்.

விசேட வேலைத்திட்டம்

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளை ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விவசாயிகளுக்கு தேவையான விதை பொருட்களும் கௌரவ ஜனாதிபதியால் விவசாயிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவசமாக காணி வழங்கும் “உறுமய” விசேட வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் தெரிவு செய்யப்பட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் ஜனாதிபதியால் நிகழ்வின் போது வழங்கிவைக்கப்பட்டன.