நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க
நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட விடயமானது, உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இன்று (23) ஜனாதிபதியினால் பதிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது, "எமது நாட்டில் நீண்டகாலமாக கட்டியெழுப்பப்பட்ட பாதகமான அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது.
நடைமுறையில் சிதைவடைந்த தரம்
2000ஆம் ஆண்டிலிருந்து நான் இந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்.
24 வருடகால நாடாளுமன்ற வரலாற்றில் இந்த நாடாளுமன்றம் தரம் குன்றிய விதத்தை, மக்கள் மத்தியில் இந்த நாடாளுமன்றம் மீதான நம்பிக்கை சிதைவடைந்த விதத்தை நாங்கள் நடைமுறையில் அனுபவித்திருக்கிறோம்.
இருப்பினும் இந்த சபை மண்டபத்திற்குள்ளேயும் சபை மண்டபத்திற்கு வெளியேயும் பொதுமக்கள் மத்தியிலும் நாடாளுமன்றம் பற்றிய நன்மதிப்பு படிப்படியாக சீரழிந்த விதத்தை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
மேலும் அது உன்னதமான, மதிப்பளிக்கவேண்டிய இடத்திலிருந்து மக்களுக்கு எதிரான, மக்களால் விரட்டியடிக்கப்பட வேண்டிய, மக்களின் குரோதத்திற்கும் பகைமைக்கும் அவமதிப்பிற்கும் இலக்காகிய நிலைமையை நாடாளுமன்றம் அடைந்துள்ளது.
அத்தகைய ஒரு நாடாளுமன்றம் எமது நாட்டை ஆட்சி செய்ய பொருத்தமானதென நான் நினைக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் உரிமைகள்
ஆகவே, அத்தகைய நாடாளுமன்றம் இனிமேலும் எமது நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் வழங்க, மக்களின் நிதிசார் தத்துவத்தை நெறிப்படுத்த பொருத்தமற்றது.
இங்கு மக்களின் நிதிசார் தத்துவத்தின் திருப்புமுனையாக அமைவது இந்த நாடாளுமன்றமாகும்.
ஆகவே, மக்களுக்காக சட்டங்களை ஆக்குவதற்கான தலையாய உரிமை நாடாளுமன்றத்திற்கே இருக்கின்றது.
அதனால் தொடர்ந்தும் மக்களிடமிருந்து விலகி நின்ற நாடாளுமன்றமாக மாற ஒரு போதும் இடமளிக்கக்கூடாது. இந்த மக்கள் ஆணை ஊடாக நாடாளுமன்றத்தின் உன்னதமான நிலைமையையும் நன்மதிப்பையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு எமக்கிருக்கிறது.
புதிய பதிப்பாக மாறும் நாடாளுமன்றம்
பெருமளவிலான புதிய உறுப்பினர்களை இன்று இந்த நாடாளுமன்றம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதனால் நல்ல பழக்கவழக்கங்களை கொண்ட நாடாளுமன்றமாக மாற்றியமைக்க முடியும்.
குறிப்பாக நிகழ்கால சபாநாயகரும், பணியாட்டொதியினரும், தெரிவு செய்யப்பட்ட நீங்கள் அனைவரும் மீண்டும் இந்த நாடாளுமன்றத்தை புதிய பண்புடன் மீள் நிறுவுவதற்காக ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நான் நம்புகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இனிமேலும் பொதுமக்களிடமிருந்து மறைந்திருக்கின்ற ஒரு நிலையமாக இந்த நாடாளுமன்றம் அமையமாட்டாது.
நாடாளுமன்றத்தை மக்களுக்கு திறந்த நிலையில் உள்ள ஒரு நிலையமாக மாற்றியமைக்க நாங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்வோம்.
முற்றுப்பெறாத அதிகாரப்பறிமாற்றம்
நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால் நாம் பேசுகின்ற, நடந்து கொள்கின்ற விதத்தைப்போலவே எமது கருத்துக்களை தெரிவித்தலை உள்ளிட்ட அனைத்துமே மக்கள் முன்நிலையில் பரிசீலிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கவேண்டும்.
எங்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தந்த பின்னர் அது முற்றுப்பெற்று விட்டது என எவராவது நினைத்தால் அது இறுதியானதல்ல.
அடுத்த அதிகாரப் பரிமாற்றம்வரை, அடுத்த மக்கள் ஆணையை உரசிப்பார்க்கும் வரை எம்மை பரீட்சித்துப் பார்ப்பதற்கான அதிகாரம் மக்களிடம் இருக்கிறது.
அதனால் எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் மக்களின் பரீட்சிப்பில் சித்தியடைகின்ற நாடாளுமன்றமாக மாற்ற இயலுமென நான் நினைக்கிறேன்.
மேலும் அதற்காக சபாநாயகர் உள்ளிட்ட உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பினை நான் எதிர்பார்க்கிறேன்.” என ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |