கிழக்கில் தொடரும் பிரச்சினைகள் : நிரந்தர தீர்வுக்கான கோரிக்கை முன்வைத்துள்ள ரவூப் ஹக்கீம்
கிழக்கில் அம்பாறை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குடையில் நிலவி வரும் தொடர்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான வரவு செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை பிரதேச செயலகம் அளவுக்கதிமான காணிகளை கையகப்படுத்தியுள்ளது. 1931ல் காலப்பகுதியிலிருந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட மூதாதையர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அநீதியிழைக்கப்பட்டுள்ளது.
தொடரும் பிரச்சினைகள்..
நவகம்புர பிரதேச செயலகப்பிரிவில் இராணுவ முகாமிற்கருகிலுள்ள 1961ஆம் ஆண்டு ஜெயபூமி உறுதி வழங்கப்பட்ட 19 விவசாயிகளுக்குச் சொந்தமான அமைந்துள்ள வயல் நிலப்பிரதேசம் தற்போது பலவந்தமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை பிரதேச செயலக பிரிவுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. அத்துடன் நீதிமன்ற ஆளுகைப்பிரதேசமும் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட அறிக்கையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அம்பாறை மாவட்ட செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், அம்பாறை பிரதேச பிரிவுக்கு உரித்தான குறிப்பிட்ட உறுதியின் பிரகாரம் தங்களுடைய விவசாயக்குழுவில் அங்கத்துவம் வகிப்பவர்கள் குறிப்பிட்ட காணியில் பயிரிடுவதற்கு இத்தாள் நான் அனுமதி வழங்குகிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு வழங்கப்பட்ட அக்கடிதத்தை மற்றும் ஏனைய ஆவணங்களையும் இச்சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
அதே நேரம், இதுவரை இவ்விவசாயிகளின் பயிர்ச்செய்கை நிலங்களுக்கு போக அனுமதி கூட கிடைக்கப்பெறவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆகவே, இவைகளைக் கருத்திற்கொண்டு அம்பாறை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கிடையில் நிலவி வரும் நீண்டகாலப்பிரச்சினை தொடர்பில் அதீத கவனஞ்செலுத்தி நிரந்தரத்தீர்வு வழங்குமாறு கோருகிறேன் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |