ஆன்மீக சிகிச்சை எனும் போர்வையில் பாலியல் அத்துமீறல்
ஆன்மீக சிகிச்சையாளர்கள் என்று தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தி கொள்பவர்கள், பல்வேறு பிரச்சினைகளுடன் தங்களை நாடி வரும் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குர்ஆன் குணப்படுத்துதல்’ என்று அழைக்கப்படும் ஆன்மீக சிகிச்சையானது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் பிரபலமான நடைமுறையாக இருந்து வருகிறது.
‘ஜின்’ எனப்படும் தீய ஆவிகளை தங்களின் உடம்பில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நோய்களுக்கும், மன ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பி, ஆன்மீக சிகிச்சை மேற்கொள்பவர்களை நாடி பெரும்பாலான பெண்கள் செல்கின்றனர்.
இவ்வாறு மொராக்கோ மற்றும் சூடான் நாடுகளில் ஆன்மீக சிகிச்சைக்கு சென்ற பெண்களில் 85 பேருக்கு அங்கு பாலியல் ரீதியாக நேர்ந்த பல்வேறு கசப்பான அனுபவங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி
இவற்றில் முக்கியமாக, ஆன்மீக சிகிச்சை என்ற பேரில் 65 பேர், தங்களிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
அத்துடன் பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ளாமல், ஆன்மீக சிகிச்சைக்கு சென்றபோது, சிகிச்சையாளர் ஒருவர் அவரிடமும் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.