பொதுவான மேடையில் பகிரங்க விவாதம்: நிதி இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள சவால்
நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்மறையான மற்றும் ஆதாரமற்ற போலியான அறிக்கைகளை வெளியிடுவோர் பொதுவான மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களின் வலுவான முடிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக முடிவுகளில் மிகவும் வலுவான முடிவாக அமையும் என்பதை நாம் அறிவோம்.
இவ்வாறான வேளையில் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நாட்டின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான களமொன்று அமைக்கப்பட வேண்டும்.
மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாடு என்பன அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் பகிரங்க விவாதங்களுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
நாட்டை மீட்பதற்கான சவால்
அத்துடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் செய்த சாதகமான விடயங்கள் மூலம் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடிந்தது.
இது தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருளாதார ஆய்வு நிறுவனங்களின் நிபுணர்களை பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |