பூரண ஜனாதிபதி பொது மன்னிப்பு எப்போது: அநுரவிடம் ரஞ்சன் கேள்வி
தமக்கு பூரண ஜனாதிபதி பொது மன்னிப்பு கிடைக்குமா என நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கைக்கு திரும்பும் ரஞ்சன் ராமநாயக்க, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட போதிலும், அது முழுமையான ஜனாதிபதி மன்னிப்பாக காணப்படவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கையின் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொதுமன்னிப்பானது கடந்த 26.08.2022 அன்று வழங்கப்பட்டது.
குறித்த பொது மன்னிப்பு ஆவணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த ஆவணங்கள் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால், அந்த ஆவணங்கள் சிறைச்சாலை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்ஜன் ராமநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.
வழக்கு மீதான விசாரணை
இந்த கருத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகளை நடத்திய உயர்நீதிமன்றம், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் இதன்போது ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து.
இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்காத பின்னணியில், கொலை குற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |