பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு! அலி சப்ரி தகவல்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்குத் தெளிவுபடுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தை முடித்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கொழும்பில் இன்று (22.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் "அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த விடயத்தை இந்தியா எவ்வாறு அணுகும்?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வகட்சி கூட்டத்தை கூட்டும் ஜனாதிபதி
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரம் தவிர ஏனையவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இலங்கையும் இந்தியாவும் நில ரீதியாக இணைப்பு
"இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தை விரிவாக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால உறவை மேலும் அபிவிருத்தி செய்தல்.
இவ்வாறான தொடர்பை உருவாக்குவது குறித்ததான ஆய்வு வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்." - இவ்வாறு இந்திய - இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இணக்கம் காணப்பட்ட விடயங்கள்
தொடர்பில் இரு நாடுகளினாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது.