ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் அளித்த உறுதிமொழி
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று 22 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடந்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை நடத்துவதற்கு ஆதரவளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க தாம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சிகள் கருத்து வெளியிட்டாலும் தாம் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலம் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த கடினமான காலத்தை நாடு தற்போது கடந்துள்ளதாக தெரிவித்தார்.
தமது அரசாங்கம் செயற்பட்டதை நாட்டுக்கு காட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய குழுக்கள் இன்னமும் பேசிக் கொண்டே இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |