இந்தோனேசிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு (Photos)

Ranil Wickremesinghe China Indonesia World
By Madheeha_Naz Oct 18, 2023 12:38 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

“ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (17) காலை பீஜிங்கில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அண்மைய பொருளாதார நெருக்கடி மற்றும் பாம்ஒயில் மீதான தடை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பாம்ஒயில் மீதான தடை

ஆசிய நாடுகள் பலவற்றுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முறைப்படுத்தவும் இலங்கை செயற்பட்டு வருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு (Photos) | Ranil Meeting With Indonesian President In China

இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமான சமயம் என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார். 

உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் போக்குகள் மற்றும் ஆசிய பிராந்தியத்திலுள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் அந்த சவால்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் நீண்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தோனேசிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு (Photos) | Ranil Meeting With Indonesian President In China

இந்தச் சந்திப்பில் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ரெடினோ மர்சூடி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். மேலும், இலங்கை தரப்பில் இருந்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.