சாணக்கியனின் 400 மில்லியன் மோசடி குறித்து அம்பலப்படுத்திய அர்ச்சுனா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசத்துக்கு மகுடம் என்ற திட்டத்தின் கீழ்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.
எனவே அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என இந்த ஊடக சந்திப்பு ஏற்படுத்தினேன்.
கிழக்கு மாகாணத்தில் தேசத்துக்கு மகுடம் என்ற திட்டத்தின் கீழ் யு.என்.டி.பி நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்காக 9 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இருந்தபோதும் தற்போது களுவங்கேணி, பாலமீன்மடு ஆகிய இரண்டு நிலையங்கள் மாத்திரம் இயங்கி வருகின்றது.
மேலும், சாணக்கியனின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் கல்லாற்றில் தேசத்துக்கு மகுடத்தின் திட்டத்தில் வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று வரை திறக்க முடியாது துருப்பிடித்து கட்டிடத்தின் கதவுகள் கழற்றப்பட்டு பாழடைந்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அபிவிருத்திக்காக அவருக்கு 400 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கினார்
அதில் எருவில் கோடைமடு குளத்தில் பதிவு செய்யப்படாத விளையாட்டு மைதானத்துக்கு 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முடிவுற்றதாக காட்டி பணத்தை பெற்றுள்ளனர்.
சுட்டிக் காட்டினால் நாங்கள் குற்றவாளியா
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக சாணக்கியனுக்கு 400 மில்லியன் ரூபா ரணில் ஒதுக்கியதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் எழுத்து மூலம் அறிக்கை வந்துள்ளது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்தில் ரணில் 800 மில்லியன் ரூபாவை சாணக்கியனுக்கு வழங்கியுள்ளதாக அதற்கான ஆதாரம் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே மிகுதி 400 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? எங்கே அந்த பணம்? அதேவேளை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் 3 கோடியே 99 இலச்சம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கின்றது.
எது எவ்வாறக இருந்தாலும் மாவட்டத்தில் நாளை கஞ்சி குடிப்பதற்கு நமக்கு கஞ்சிக்காவது வழி கிடைக்குமா என ஆயிரக்கணக்கான பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
ஆனால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தாது தேவையற்ற முறையில் முறையற்ற விதத்தில் இந்த பணத்தை உங்கள் ஊரிலே மாத்திரம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செய்துள்ளார்.
அபிவிருத்திக்கு வந்த பணத்தில் 3 கோடியே 99 லட்சத்தை திருப்பி அனுப்பினால் எந்த அரசாங்கமும் மாவட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காது அதை சுட்டிக் காட்டினால் நாங்கள் குற்றவாளியா என்றும் குறிப்பிட்டுள்ளார்.