முருகனை இலங்கைக்கு நாடு கடத்த இந்திய மத்திய அரசு உத்தரவு

Rajiv Gandhi Chennai India
By Dhayani Dec 21, 2023 02:11 AM GMT
Dhayani

Dhayani

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசு, சென்னை மேல்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எனினும் அவரை அவரது தாய்நாடான இலங்கைக்கு நாடு கடத்த முடியும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட முருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை மேல் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை மன்றுரைத்துள்ளார்.

பிரித்தானியாவிற்கு செல்ல  அனுமதி

இந்தியாவிலிருந்து வெளியேறி பிரித்தானியாவிற்கு செல்வதற்கான பயண ஆவணங்களை முருகன் கோரி வரும் நிலையில் அத்தகைய அனுமதி அல்லது வெளியேற உத்தரவை வழங்க முடியாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அவரது ஆவணங்களை அனுப்பியுள்ளதாகவும்  அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மனுதாரருக்கு கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்களை வழங்கினால் மட்டுமே, இந்திய வெளியுறவு அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை

தற்போது திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் முருகன் தங்க வைக்கப்பட்டுள்ள அவர் பிரித்தானியாவில் உள்ள தனது மகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக முருகன் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து, முருகனின் இந்த மனுவை சென்னை மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.