இம்ரான் மகரூப் அநுரவிடம் எழுப்பியுள்ள கேள்வி
400 பேரின் ஊழல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக தேர்தல் மேடைகளில் கூறி வரும் அநுர அவற்றை இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வினவியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது வலுவான ஊழல் ஒழிப்பு சட்டங்கள் உள்ளன. அதன் மூலம் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள்
அதன் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பலர் அண்மையில் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தண்டனை விதிக்கப்பட்டனர்.
இவ்வாறு இருக்கின்றபோது, 400 பேரின் தகவல் பல தன்னிடம் இருப்பதாகக் கூறும் அனுரகுமார, அது குறித்து இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அதிகாரம் கிடைத்தபின் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வது ஒரு சிறுபிள்ளைத்தனமான வேடிக்கையான கதையாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்று, பல தேர்தல் மேடைகளில் போலியான வாக்குறுதிகளை வழங்கும் அனுரகுமார, அதிகாரம் கிடைத்தால்கூட ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்பதையே அவரின் போலியான தேர்தல் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றது.
இந்நாட்டில் ஊழல் ஒழிய வேண்டுமென்று, அவர் விரும்புவாராயின் தன்னிடமுள்ள ஆதரங்களில் சிலவற்றையாவது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவர் நடவடிக்கை எடுக்கத் தயாராகிறார் என்று நம்ப முடியும்.
இதனை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே தேர்தல் மேடைகளில் போலியான வாக்குறுதிகளை வழங்குவதில் எந்தப் பயனுமில்லை என்பதை நான் அவருக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |