பிரமிட் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Ranjith Siyambalapitiya Sri Lanka Sri Lankan Peoples Ministry of Finance Sri Lanka
By Fathima Aug 14, 2023 08:45 AM GMT
Fathima

Fathima

பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் நபர்கள், திட்டத்தை பிரபலப்படுத்த மத நிகழ்வுகளை கூட ஏற்பாடு செய்கிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை - ருவன்வெல்ல பகுதியில் நேற்று (13.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சமூக அடையாளமாக மாறியுள்ள இந்த பிரமிட் திட்டத்தை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை அதிகபட்சமாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவைப்பட்டால் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான திட்டங்களை தடை செய்வதையோ அல்லது அதற்கான தண்டனையையோ பெற்றுக் கொடுப்பதை விட இந்த மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவற்றுக்கு பலியாகாமல் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் S 83(C)இன் படி பிரமிட் திட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரமிட் திட்டம் எந்த வகையிலும் சட்டப்பூர்வமானது அல்ல. இந்த சமுதாயத்தின் படித்த குடிமக்களாக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது உங்கள் கடமை.

இது ஒரு வகையில் சமூக வைரஸ். எங்களிடம் போதுமான பிரச்சினைகள் உள்ளன, எங்களுக்கு எந்த புதிய சிக்கல்களும் தேவையில்லை. இந்த திட்டங்களில் ஈடுபடும் நபர்கள் இறுதியில் சிக்கலில் விழுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், எந்தவொரு பிரமிட் திட்டங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர் அவசர அறிவிப்பொன்றையும் வழங்கியுள்ளார்.

இதேவேளை பிரமிட் திட்டங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.