மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அதிரடி கைது!
மட்டக்களப்பு(Batticaloa) கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மாறுவேடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரடியானாறு பகுதியை சேர்ந்த ஒருவரிடம், உணவுக் கடை ஒன்றை அமைப்பதற்காக, கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலின்படி, சம்பவதினமான இன்று(29) பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதி வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில், அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |