யாழில் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம் (Photos)
இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்குச் சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிப்படுத்தக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இப்போராட்டமானது இன்றைய தினம் (21.09.2023) யாழ்ப்பாணம் - நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
உலக சமாதான தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
பல்வேறு கோஷங்கள்
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள், "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், தமிழ் மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதே, இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வழி விடுங்கள், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் சர்வதேச கண்காணிப்பு வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், உலக சமாதான தினத்தில் தமிழ்
மக்களுக்குச் சமாதானம் வேண்டும், இலங்கை அரசே உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை
உறுதிப்படுத்து, மதங்கள் கடந்த மனிதத்தை நேசிப்போம், மனித உரிமைகளுக்கு
மதிப்பளியுங்கள்" உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி
நின்றனர்.
போராட்ட நிறைவில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை ஐ.நா. உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி ஜ.நா. அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.